Monday, April 9, 2018

முகங்கள்


  முகங்கள்
சின்னாட்களில்,  எண்ணும்  எழுத்தும்  கற்று,
கூட்டி வாசிக்கத் துவங்கிய காலையிலேயே
பற்றிக்கொண்ட வழக்கம், செய்திப் பத்திரிகை
கையில் கிடைத்தால்- வீட்டிலானாலும்
முடி திருத்தச் செல்லும் சலூண் உட்பட்ட வெளியிடமானாலும்
தன் வரிசைமுறை வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம்
வந்தால் பேயாய்ப் பற்றிக்கொள்ளும் மனச்சோர்விலிருந்து குதறிவிலகி
வெளியேறி வெறி பிடித்தவனாய் பாய்ந்தோடி விடுவதிலிருந்து
சித்தத்தை பிய்த்து விலக்க, செய்தி பத்திரிகையில்
தஞ்சமடைகையில்………..முதலில் படங்கள்- சினிமா விளம்பரங்களில்
நடிகர் நடிகைகளின் கவர்ச்சிப்படங்களுக்குப்பின்னர்
கவனத்தைக் கவரும் ஆங்காங்கே தென்படும் சின்னச் சின்ன
புகைப்படங்கள்- நீத்தோர் நினைவு முகங்கள்…..பார்ப்பதில் ஒரு குறுகுறுப்பு…..
வயசேற ஏற பத்திரிகைகளில் அலசப்படும்
சமூக அரசியல் பிரச்னைகளில் முழுகும் போதும்
நினைவஞ்சலி படங்கள், முந்தைய நாளில் காலமாகி,
தகன ,இடம், தேதி, நேரம் பற்றிய தகவல்களுடனான
இறப்புச்செய்திப் புகப்படங்களை பார்க்கும் வழக்கம்..
தெரிந்தவர், தெரியாதவர், இளையவர், முதியவர், உற்றார், உறவினர், நண்பர்கள், அல்லாதவர், ஆண்கள், பெண்களின் முகங்கள்……………
மனதில் நிறையும் சோகமுடன், .சிலரின் மறைவில் துக்கம் விசாரித்து,
அனுதாபம் தெரிவித்து வீட்டிலும், மயானத்திற்கும்
போகும் பொருட்டு, பத்திரிகை கையிலெடுத்தால்
முதலில் புரட்டுவது இந்த பக்கமே யந்திர கதியில்………
அனேகமாய் எல்லா முகங்களிலும்  ஒருவித வேதனை, விரக்தி..,
வாழும் போது புகைப்படத்திற்காக மூச்சை அடக்கிக்கொண்டு
நின்றதினாலா.., இல்லை இப்போது இந்த பக்கத்தில் பார்ப்பதினாலா……?
சில நாட்களில், பொது இடங்களில் விபத்தினாலோ, ஆஸ்பத்திரியிலோ
தெரிந்தவர் யாரும் பக்கத்தில் இல்லாத நேரத்தில்
கடைசி மூச்சை விட்டவர்களின் முகங்களும்-சவக்கிடங்கில்
கிடப்பதாய் உற்றார் உறவினரை தெரிவித்து தென்படுவதுண்டு….
உயிர்க் களை இழந்த முகங்கள்……வாழ்வெனும் நாடகத்தில் ஒருமுறை வரும்- திரும்பி வராது சென்று மறைந்துவிட்டவஸந்த ருது…
இலையுதிர் காலக்காற்றில் ஆடி உலர்ந்து நிற்கும்
பருவத்திலும் நாள்தோறும் இந்த முகங்களின் இடையில்
தேடுவது எந்த முகத்தை?நடைப்பிணமாகி விட்ட சொந்த முகத்தையா…….?
             நீல பத்மநாபன்


,       


No comments: