Monday, April 9, 2018

காதல் தினம்


     காதல் தினம்

இரவில் அலட்டும் துர்சொப்பனங்கள்,  
புள்ளினங்கள் பள்ளியெழுச்சி பாட
மலரும் இளம் காலை பொழுதிலும்,
நல்லவர்களாய் வாழ்க்கை நாடகத்தில் வந்துசேர்ந்து, பின் பொல்லாதவர்களாகி பொல்லாங்குகளை
விஷவித்துகளாய் விதைத்தவர்களின்
தீய நினைவுகளாய் தொடர்வது
முன்பெல்லாம் என்றோ ஒரு நாள்……….
என்றும் நிகழ்வதாகிவிட்ட இன்றைய நாளிலிருந்து
விமோசனம் வராதா என ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும்
வேளையிலல்லவா உதயகிரியில் மெல்ல உயர்ந்து
ஊர்ந்திறங்கி அருகில் வந்து குளிர் தென்றலாய்
இதழ் பதித்து துயிலெழுப்பியிருக்கிறாய்……….!
இளமையும் வலிமையும் பொங்கி வழிந்துகொண்டிருந்த நாளில் , மங்கைமார்களின் கடைக்கண் பார்வைச்சரங்களை
எதிர்கொள்ள துணிவின்றி ஒதுங்கிப்போன கூச்ச குணம்….
அந்நாள் வரை பங்கம் வராது கட்டிக்காத்த பிரம்மசரியத்தை,
இல்லறத்தை நல்லறமாக்க படி தாண்டி வந்த
பத்தினியின் பாதத்தில் சமர்ப்பித்தும்,
சண்டை போடவே சரியாக இருந்த நேரம்..
மரத்துப்போய்விட்ட, மிஞ்சியிருந்த
அற்பம் சொற்ப ரொமாண்டிக் உணர்வுகள்….
பார்வைச் சரங்களை எதிர்கொள்ளும் துணிச்சல் வந்த நாளில்
பாராமுகங்களாக கடந்துபோயினர்
தப்பித்தவறி பார்த்தவர்கள்- சம, அதிக வயதினரும் கூட
தாத்தாவென அழைத்து தம் இளமையை
நிலை நாட்டினர், அன்புடன்……………………

நீல பத்மநாபன் (14-2-2018- வாலண்டியன் தினம்)
  , 

  





No comments: