Monday, April 9, 2018

முகங்கள்


  முகங்கள்
சின்னாட்களில்,  எண்ணும்  எழுத்தும்  கற்று,
கூட்டி வாசிக்கத் துவங்கிய காலையிலேயே
பற்றிக்கொண்ட வழக்கம், செய்திப் பத்திரிகை
கையில் கிடைத்தால்- வீட்டிலானாலும்
முடி திருத்தச் செல்லும் சலூண் உட்பட்ட வெளியிடமானாலும்
தன் வரிசைமுறை வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம்
வந்தால் பேயாய்ப் பற்றிக்கொள்ளும் மனச்சோர்விலிருந்து குதறிவிலகி
வெளியேறி வெறி பிடித்தவனாய் பாய்ந்தோடி விடுவதிலிருந்து
சித்தத்தை பிய்த்து விலக்க, செய்தி பத்திரிகையில்
தஞ்சமடைகையில்………..முதலில் படங்கள்- சினிமா விளம்பரங்களில்
நடிகர் நடிகைகளின் கவர்ச்சிப்படங்களுக்குப்பின்னர்
கவனத்தைக் கவரும் ஆங்காங்கே தென்படும் சின்னச் சின்ன
புகைப்படங்கள்- நீத்தோர் நினைவு முகங்கள்…..பார்ப்பதில் ஒரு குறுகுறுப்பு…..
வயசேற ஏற பத்திரிகைகளில் அலசப்படும்
சமூக அரசியல் பிரச்னைகளில் முழுகும் போதும்
நினைவஞ்சலி படங்கள், முந்தைய நாளில் காலமாகி,
தகன ,இடம், தேதி, நேரம் பற்றிய தகவல்களுடனான
இறப்புச்செய்திப் புகப்படங்களை பார்க்கும் வழக்கம்..
தெரிந்தவர், தெரியாதவர், இளையவர், முதியவர், உற்றார், உறவினர், நண்பர்கள், அல்லாதவர், ஆண்கள், பெண்களின் முகங்கள்……………
மனதில் நிறையும் சோகமுடன், .சிலரின் மறைவில் துக்கம் விசாரித்து,
அனுதாபம் தெரிவித்து வீட்டிலும், மயானத்திற்கும்
போகும் பொருட்டு, பத்திரிகை கையிலெடுத்தால்
முதலில் புரட்டுவது இந்த பக்கமே யந்திர கதியில்………
அனேகமாய் எல்லா முகங்களிலும்  ஒருவித வேதனை, விரக்தி..,
வாழும் போது புகைப்படத்திற்காக மூச்சை அடக்கிக்கொண்டு
நின்றதினாலா.., இல்லை இப்போது இந்த பக்கத்தில் பார்ப்பதினாலா……?
சில நாட்களில், பொது இடங்களில் விபத்தினாலோ, ஆஸ்பத்திரியிலோ
தெரிந்தவர் யாரும் பக்கத்தில் இல்லாத நேரத்தில்
கடைசி மூச்சை விட்டவர்களின் முகங்களும்-சவக்கிடங்கில்
கிடப்பதாய் உற்றார் உறவினரை தெரிவித்து தென்படுவதுண்டு….
உயிர்க் களை இழந்த முகங்கள்……வாழ்வெனும் நாடகத்தில் ஒருமுறை வரும்- திரும்பி வராது சென்று மறைந்துவிட்டவஸந்த ருது…
இலையுதிர் காலக்காற்றில் ஆடி உலர்ந்து நிற்கும்
பருவத்திலும் நாள்தோறும் இந்த முகங்களின் இடையில்
தேடுவது எந்த முகத்தை?நடைப்பிணமாகி விட்ட சொந்த முகத்தையா…….?
             நீல பத்மநாபன்


,       


காதல் தினம்


     காதல் தினம்

இரவில் அலட்டும் துர்சொப்பனங்கள்,  
புள்ளினங்கள் பள்ளியெழுச்சி பாட
மலரும் இளம் காலை பொழுதிலும்,
நல்லவர்களாய் வாழ்க்கை நாடகத்தில் வந்துசேர்ந்து, பின் பொல்லாதவர்களாகி பொல்லாங்குகளை
விஷவித்துகளாய் விதைத்தவர்களின்
தீய நினைவுகளாய் தொடர்வது
முன்பெல்லாம் என்றோ ஒரு நாள்……….
என்றும் நிகழ்வதாகிவிட்ட இன்றைய நாளிலிருந்து
விமோசனம் வராதா என ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும்
வேளையிலல்லவா உதயகிரியில் மெல்ல உயர்ந்து
ஊர்ந்திறங்கி அருகில் வந்து குளிர் தென்றலாய்
இதழ் பதித்து துயிலெழுப்பியிருக்கிறாய்……….!
இளமையும் வலிமையும் பொங்கி வழிந்துகொண்டிருந்த நாளில் , மங்கைமார்களின் கடைக்கண் பார்வைச்சரங்களை
எதிர்கொள்ள துணிவின்றி ஒதுங்கிப்போன கூச்ச குணம்….
அந்நாள் வரை பங்கம் வராது கட்டிக்காத்த பிரம்மசரியத்தை,
இல்லறத்தை நல்லறமாக்க படி தாண்டி வந்த
பத்தினியின் பாதத்தில் சமர்ப்பித்தும்,
சண்டை போடவே சரியாக இருந்த நேரம்..
மரத்துப்போய்விட்ட, மிஞ்சியிருந்த
அற்பம் சொற்ப ரொமாண்டிக் உணர்வுகள்….
பார்வைச் சரங்களை எதிர்கொள்ளும் துணிச்சல் வந்த நாளில்
பாராமுகங்களாக கடந்துபோயினர்
தப்பித்தவறி பார்த்தவர்கள்- சம, அதிக வயதினரும் கூட
தாத்தாவென அழைத்து தம் இளமையை
நிலை நாட்டினர், அன்புடன்……………………

நீல பத்மநாபன் (14-2-2018- வாலண்டியன் தினம்)
  , 

  





நம்பிக்கை


                      நம்பிக்கை
  புத்தக விழாக்களுக்குச் சென்றால்
  வாங்க வருபவர்களைவிட
  விற்க வருபவர்களே அதிகம்..
  கதை கவிதை அரங்கங்களுக்குச் சென்றால்
  கேட்க வருபவர்களைவிட
  கதை கவிதை வாசிக்க வருபவர்களே அதிகம்...
  மனபாரங்கள், எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களையெல்லாம்
  முறையிடலாமென்று வந்தால்
  கேட்பவர்களைவிட முறையிடுபவர்களே அதிகம்...
  வேறுவழி தெரியாமல்
    பக்தி யோகத்தில் கடைசிப்படியெனத்தெரிந்திருந்தும்
  உன்னை நாடி வ்ந்து அடைக்கலம்...
    அதோடு, பகல் நேரம் பூரா பகலவனின்
  வெளிச்சம் வெயில் வெப்பத்தின் கூட
  சுட்டெரிக்கும் தீ நாக்கின் வாக்கு,
    போக்குகளின் இம்சைகள்...
  விம்மும் நெஞ்சுடன் தான்
  கரடு முரடான குண்டும் குழியும் கொண்ட
  இருளும் வெளிச்சப்புள்ளிகளும் இரண்டற கலந்த
   பாதைகள் நடந்து உன்னிடம் அடைக்கலம்....
     சின்னாட்களில் அதைத்தா இதைத்தா என்றெல்லாம்
      வேண்டியதைப்போல்
  பின்னாட்களிலும் பட்டம் தா, பதவி தா
 என்றெல்லாம் யாசிப்பது கீழான இறைஞ்சல்....
  எது தகுதியோ அதைச்செய்..,
  இல்லையேல் உலக நன்மையை வழங்கு..
  -இதெல்லாம் கூட தேவையா....?
  அவனின்றி அணுவும் அசையாது...’,
  நடப்பதெல்லாம் நன்மைக்கே
  இந்த தாரக மந்திரங்கள் போதாதா ,
  தனி பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் வேறு வேண்டுமா........?
      முன்னால் நின்ற ஒரு சிலரில்
  ஒரு முகம் முன்பு எப்போதோ
  கண்டு மறந்தது போல் ஒரு மாயத் தோற்றம்...
  ஒரு குறு நகை அரும்புகிறதா....
  நீண்ட அவர் கரத்துடன் தன் கரமும்
  ஸ்பரிசித்து திரும்பியதும்
  நெஞ்சில் நிறையும் நிம்மதி....                            நீல பத்மநாபன்




Sunday, April 8, 2018

ஹான் ஒலி




                                                 ஹாண் ஒலி
                                   தூரத்து மலைமுகட்டிலிருந்து மெல்லிசாய்
                                 கேட்கத்துவங்கி, விரைந்து பக்கம் பக்கம் வரும்
                                 சங்கொலி போல், நீட்டிமுழங்கி
                                 வந்து கொண்டிருக்கும் அபாய ஒலி...,
                            நேரம் காலம், சமய சந்தர்ப்பப் பிரக்ஞையின்றி……
                        யாமங்களில்- அயர்ந்த தூக்க வேளைகளானால்
                               பிறகு தூக்கமில்லைபகல் பொழுதுகளில்- பணிகளில்
ஈடுபட்டிருக்கையிலென்றால்  பிறகு வேலையை தொடர இயலாத அவஸ்தை;         உணவு வேளைகளானால் பின்  அடைத்துக்கொள்ளும் தோண்டை…….
                              ஒரு படபடப்பு..நெஞ்சைப்பிழிவதுபோல்...
                              பயமா......? இல்லை  இல்லை...இன்னதென்று சொல்லத்தெரியாத மானசீக அவஸ்தை-அமைதியின்மை...
                             வலியாலோ வேறு ஏதோ பிராணாவஸ்தையாலோ
                            துடிதுடிக்கும் ஜீவாத்மா....அந்த அவஸ்தை எதையும் பகர்ந்து    வாங்க இயலாது பார்த்து  பரிதவிக்க மட்டும்  விதிக்கப்பட்ட
                           பக்கத்திலிருக்கும் உற்றோர் ஒரிருவர்….
                            இல்லை, ஒருவேளை உயிர் பறவைப்
                          பறந்து மறைந்துவிட்டதால், வண்டியின்
                          அசைவுகளால், கிடப்பில் அங்குமிங்கும்
                          ஆடி அசைந்துகொண்டிருக்கும் வெறும் கூடா.....?
                        இந்நாள் வரை,  தொலைவிலிருந்து தன்னை நோக்கிப்
                   பாய்ந்து கிட்டத்தில் வந்துவிட்டு,
                     எதையோ எடுக்க மறந்து விட்டதைப்போல
                  வந்த வேகத்திலேயே  தலைதெறிக்க
   எதிர் திசையில் பாய்ந்து சென்று மாய்ந்து மறைந்ததெல்லாம்
   தன்னை நாடி வருவதற்கான ஒத்திகையா?
   இதோ இதோ.... வழக்கம் போல் தூரதொலைவு
      மலைமுகட்டிலிருந்து கூவிவந்துகொண்டிருக்கும் சங்க நாதம்...
    நெருங்கி வந்ததும் நின்றுவிட்டதா.....
     யார் யாரெல்லாமோ தெரிந்த தெரியாதவர்கள்
   ஜட வஸ்துவை துக்கி உள்ளே தள்ளுவதைப்போல்
    கிடத்தும் போது, தலை கதவில் முட்டி மோதி வலித்தபோது.....
 இன்னும் கூண்டு முற்றிலும் காலியாகவில்லையா....
 மீண்டும் சங்கொலியா..பாய்ச்சலா கொஞ்சம் கொஞ்சமாய்
  அற்றுபோய்கொண்டிருக்கும் உணர்வு மணடலம் .....
.                                    நீல பத்மநாபன்