Tuesday, December 1, 2015

சொற்சிற்பம்


                                          சொற்சிற்பம்

                 மெட்டை மட்டும் மனதில் கொண்டு
               ராகமாய் ஒலி செய்யும்
                     நாத பிரம்மத்தில்
              ஒன்று கலந்து
              பாகாய் லயித்து
                  அமர சஞ்சாரம் செய்யும் மனமே
                 பொருள் பற்றி அலட்டிக் கொள்ளாது
             அடுக்கிடும் வெறும் சொற்களின்
                 சிற்பத்தில் லயித்திட
             தயக்கமேன்……?!

                   நீல பத்மநாபன்
   
 


  

Tuesday, October 27, 2015

குறை



                                                        குறை

                                                      வாலியை
                                                  மகாபலியை
                                                  மாய்த்ததை
                                                 என்னதான் நியாயங்கள்
                                                      நிரப்பினாலும்
                                                       ஒப்புக்கொள்ள
                                                 மறுக்கும் மனமே
                                                       குறையொன்றுமில்லாத
                                                கோவிந்தனாக இருந்தாலும்
                                                  அவதாரமென்று
                                               மண்ணுலகில் வந்துவிட்டால்
                                               ஒப்புக்கேனும்
                                               குறை வந்துவிடுமென்று
                                                    ஆறுதல் கொள்ளலாகாதா
                                                  தனக்குத்தானே?

                                          நீல பத்மநாபன் 
                                                                           25-10-2015    


Sunday, August 23, 2015

நடப்பியல்




                               நடப்பியல்

                            அன்றாட வாழ்வில்
                            மூச்சுத் திணறவைக்கும்
                           ஒராயிரம் நடப்பியல் உண்மைகள்
                            நித்தம் நித்தம் நிரந்தரமாய்
                    குரல்வளையை நெறித்துக்கொண்டிருக்கையில்
                             உலக மகா தத்துவங்கள்
                            வரலாற்று ஆவணங்களை
                             பார்த்துப் பரவசப்படச்சொன்னால்........?!


                                                  நீல பத்மநாபன்

Tuesday, July 28, 2015

மின்னல் இடி மழை



                           மின்னல் இடி மழை
             நீல பத்மநாபன்

             பளிச் பளிச்சென்று மின்னல்
            விழிகளைக் கூசசெய்யும் போதே
            கேட்கப்போகும் பேரிடிச் சத்தத்தில்
             திகில் கொண்டு அஞ்சும் நெஞ்சம
             சோவென்ற மழையில்
             சோகம் கொண்டாலும்
             உள்ளுக்குள் ஒவ்வொன்றாய்
              மடல் விரியும் ஒராயிரம்
              உவகை மலர்கள்........
              இடி மின்னல் தாக்கல்களை தவிர்க்கவும்
              தப்பிக்கவும் வழிகள் பற்றி
              அடிப்பிரக்ஞை பிராண்டிக்கொண்டிருக்க,
               காற்றில் கம்பிப்பிடிப்புக்கு மேலே
               உயர்ந்து மடங்கி மழைநீரை நிரப்பி
               பொங்கி வழியச்செய்யும்
               துணி தாங்கி நிலைகுலையச்செய்யும்
               குடையும் கையுமாய்
               மழைநீரும் சாக்கடைவெள்ளமும்
               சங்கமித்து நதியாய் ஓடும்
               வீதிகளில் நகர்வலம்......
                                                   
                வைகாசி வரை காத்திராமல்
                காலத்திற்கு முந்தி சித்திரையில்
                தன் பிறவி தருணத்திலேயே வந்து
                ஆரம்பமானதா இந்த இடி மின்னல் மழை
   உறவுப்பிணைப்பு-அன்பு வெறுப்பு சிநேகப்பிடிப்பு......! 
                                            
                 இதோ மீண்டும் பளிச் பளிச்சென்ற மின்னல்
                பட படவென்ற பேரிடிச் சத்தம்..
                மழை மட்டும் பெய்யவில்லை
                சிலரின் ஆர்ப்பாட்ட ஆரவார மிக்க
                பயனற்ற பாழ்ச் சொற்களைப்போல்....

                          26-7-2015


Monday, June 29, 2015

வண்டிக்காளை



வண்டிக்காளை
நீல பத்மநாபன்

காரணம் புரியாமல்
புகைமூட்டமாய் எந்நேரமும்
மனதில் சூழ்ந்துகொண்டிருக்கும்
சோக வெறுமை,
சுழந்துகொண்டிருக்கும்
அமைதியின்மை
எதையும் செய்யவிடாமல்
கிரியாசக்தியுடன்
ஒத்துழைக்காத
உறுப்புக்கள்
இன்னும் எத்தனை நாள்,
எத்தனை காதமென்று
பாரவண்டியை இழுத்துக்கொண்டிருக்கையில்
சுரீர் சுரீரென்று சாட்டையடிகள்
அதட்டல்கள்.....ஆக்ஞைகள்...எள்ளல்கள்...
ஐயோ பாவம் என்று பார்வையாளர்கள்
பரிதவிக்க….
இன்னும் பாரமேற்றமாட்டார்களா
கொஞ்ச தூரம் கூட போக மாட்டோமா
என்றுஆசைகொள்ளும் அதிசயக் காளைகள்....!

28-6-2015

Monday, May 25, 2015

ஆப்பரேஷன் வெற்றி, ஆனால்


             

                     ஆப்பரேஷன் வெற்றி,  ஆனால்....

                      நீல பத்மநாபன்
             
             வானம் கறுத்தால், மழை பொழிந்தால்
             நீர் ஓடி ஒழுகிப்போக விடாத,
      நகரில் குறுக்கேயும் நெடுகேயும் கிடக்கும்,
            அகலமான சாக்கடைகள் மீது காண்க்ரீட் தூண்கள்,
      சிமண்ட் சுவர்கள் பலமாக கட்டி உயர்த்தப்பட்ட
      கட்டடங்கள்-கடைகள், வீடுகள், கிட்டங்கிகள்,
      கட்சி காரியாலயங்கள், கோயில்கள், திருமண மண்டபங்கள்......!
      ராஜ பாட்டைகள் சந்துகள் வீடுகள் குடிசைகள் கடைகள்
       கோயில்கள் பேதமின்றி எங்கெங்கும் சாக்கடைநீரும்,
       கூடவே அடித்துக்கொண்டு வரும் கழிவுப்பொருட்களும்
       புகுந்தோடுவதைக் கண்டு பற்பல திட்டங்கள் உதயம்.....
       ட்ராக்டர்கள், காவற்படை சகலவித தயாரெடுப்புகளுடன்
       சாக்கடைகளை மூடியிருந்த  கான்க்ரீட் ஸ்லேபுகள்,
          அனுமதியின்றி கைப்பற்றி  அவை மீது கட்டப்பட்டவை
      எல்லாம் தூள் தூள்....,அங்கிங்கு சிற்சில தடைகளிருந்தும்.
      அடைமழை ஆர்ப்பரிக்க ஆங்காங்கே சாக்கடை குப்பைக்கூளங்கள்,
      அடைப்புக்கள் அப்புறப்படுத்தும் வேலைகள்
     அமோகமாய் நடந்தேற நடந்தேற.......
          தடைகள் நீங்கி  பெருக்கெடுத்தோடி வரத்தொடங்கிய                                            
     மழை வெள்ள்மும் சாக்கடை நீருமெல்லாம்
          போய்ச்சேரவேண்டிய இடம் தெரியாதுடன்,
     வழக்கமாய்ப் போகும் சாக்கடைப்பாதைகள் யாவும்
     கல்லும் மண்ணும் பிளாஸ்டிக் குப்பைக்கூளங்களும்
     நிறைந்து கிடப்பதால்.....நகரெங்கணும்
         வீடு, கடை, வெளி பேதமின்றி  வெள்ளம் வெள்ளம்.
         முன்னாலிருந்ததை விட வெள்ளம்
          சாக்கடை கழிவுநீர் கலந்த பெரும் வெள்ளம்..

                                                                                 24—5--2015


         

             
          


Monday, March 23, 2015

சமய சந்தர்ப்பம்

      

                  

                       சமய சந்தர்ப்பம்

              நீல பத்மநாபன்

                        எல்லோருக்கும்தான்
            பேசத்தெரிகிறது...
                      செய்கையிலும்
                      சளைத்தவர்களல்ல..
                      ஆனால்
           பேச்சும் செயலுமெல்லாம்
                      என்ன
                      எங்கே
                      எப்போ-
            முந்தியா
                        பிந்தியா எனத்
                     தெரியாமல்
                     பிரயோகிப்பதால் தானா
                        அனர்த்தங்கள் யாவும்?

                     இளமை முகத்தில் மட்டுமன்றி
                     அங்கங்கள் அனைத்திலும்
                     பொங்கி வழிந்துமொண்டிருந்த
                     காலங்களிலெல்லாம்
                     வெறும் பார்வை பரிமாற்றங்கள்
                     கனவுகள் கற்பனைகளுக்கு மேல்
                     போக அஞ்சிக்கிடந்தது,
                     மணமாலையின் அனுமதி பெற்ற்பின்
                    கிளர்ந்தெழுந்து அடங்கி ஒடுஙகியும்
                    முற்றிலும் சமனம் பெறாமல்
                    காலம் கடந்து மீண்டும்
                       தலைதூக்கிற்து என்றால்...........

                                                                                                          20-3-2015
               


Monday, February 23, 2015

பட்டாம் பூச்சியாய்


                                            பட்டாம் பூச்சியாய்…….
                                                        
                                              நீல பத்மநாபன்
                                                                  
                                             இந்நாள் வரை வாழ்ந்த
                             கூண்டினுள்ளிலிருந்து
                            விமோசனம் பெற்று
                                        வெளியேற
                                       பட்டாம்பூச்சியாய்   
                                          படபடத்துக்கொண்டிருக்கையில்
                                         நீடிக்கும் வாழ்நாட்கள்.......
                            நீடிகக நீடிக்க
                         சகஜீவிகளுக்கு அலுப்பு...
...                                  ஆறுதல் தேறுதல்கள் இருக்கட்டும்,
                                       சுயரோதனை வேதனைகளையெல்லாம்
                                      ஒதுக்கித்தள்ளிவிட்டு
                      அவர்கள் அலுப்பை விரட்டி
                                  விருப்பை ஊட்ட,
                      குரங்காட
                              அந்த அந்திம நாட்களிலும்
                                 தெரியாவிடில்.........!

                                                                *      *      *

                 உயிரை கையில் பிடித்துக்கொண்டு
                 வாழ்வதாய் சொல்லக்கேட்கையில் எல்லாம்
                                  பிடிவிட்டுவிட்டால் போய்விடுமென்றால்
                 போய்த்தொலையட்டுமே என
                நினைந்துகொண்ட நாளெல்லாம் போய்
                                உடல் உபாதைகள் கட்டறுந்த இம்சைப்பிராணிகளாய்
                               அல்லும் பகலும் கூட்டத்தோடுத் தாக்கி
                               உள்ளையும் சேர்த்து நிலைகுலையச்செய்கையில்
                   அடிபதறி வீழாதிருக்க
               பீஷ்மரின் சரசயன நிலையிலும்
                               தோற்றுப்போகாதிருக்க
                       பிடித்து நின்று இயக்க வலு ஒழுகித்தீராதிருக்க
                              உடும்புப்பிடியாய்......
                             அது தானா   உயிர்.......?
                                                                                              பிப்ரவரி-2015